தருமியும் தலைவனும்

“சார், இந்த ஐடியா உங்களுக்கு எப்படி வந்தது! செம.”

என்னோட முகம் செம்மையாகுறதை என்னால உணர முடிஞ்சது. பொதுவா இந்த மாதிரி கேள்விய நம்ம பாஸ் கேக்குறப்போ ஒரு ‘கெத்’தா இருக்கும். அந்த கேள்வில நம்ம திறமைக்கான அல்லது புத்திசாலித்தனத்துக்கான பாராட்டைத் தாண்டி, இந்த யோசனையால அலுவலகத்துல ஆளக் குறைக்க முடியுமா, ‘அவுட்புட்’ட அதிகமாக்க முடியுமா, வருமானத்துல எத்தன சதவிகிதம் வளரும்கிற விஷயங்கள் தான் முக்கியமானதா இருக்கும். இந்த கிளைக்கேள்விகளுக்கான பதிலைப் பொறுத்துதான் நம்ம யோசனையோட மதிப்பு தீர்மானிக்கப்படுது.

ஆனால் இதே கேள்வியை நாம் வழிநடத்தும் ஒருத்தர் கேட்கும்பொழுது — அதுவும் அவரோட கண்கள்ல மகிழ்ச்சிமின்ன கேட்கும்பொழுது — நமது யோசனை ஒரே ஒரு காரணியை மட்டுமே திருப்திப்படுத்துது: ‘உன்னுடைய யோசனை என் வேலையை எளிமையாக்கும்‘.

நம்ம பாஸ் இந்த கேள்விய கேக்கும்போழுது நம்மளோட அகங்காரத்துக்கு தீனி கிடைக்கிறது. வரிசையா பட்டியலிட பலகாரணங்களும்  கிடைக்குது. நம்மால வழிநடத்தப்படுறவர் இந்த கேள்வியை கேட்கும்போது ஒரே பதில்தான் இருக்குது.

அதுமட்டுமில்ல, நம்மால வழிநடத்தப்படுறவர்கிட்ட இந்த கேள்வி அரிதாவும் அமையுது. இன்றைக்கும் அப்படித்தான். நிச்சயமாக இந்த யோசனை ஒரு எரிச்சலான வேலையை எளிமையானதா மாத்தக் கூடிய யோசனை. எப்படின்னா, ஒரு கட்டிடப் பொறியாளர் இருக்கார்னு வெச்சிக்குவோம். கட்டிடம் கட்டுறது அவருக்கு ரொம்ப மகிழ்ச்சியைத்தருகிற வேலை.  ஆனா செங்கல்லை தூக்குறது அவர் வேலை கிடையாது. வேற வழியில்லாம அவர் செங்கல் தூக்கவேண்டிய கட்டாயத்துல ஆளாகி செங்கல்ல தூக்கினார்னா எவ்வளவு எரிச்சலடைவாரோ அந்த அளவுக்கு எரிச்சலான வேலையை இந்த யோசனை தவிர்க்கக் கூடியது. இப்போ உங்களுக்குப் புரியும்னு நினைக்கிறேன்.

சரி, இப்போ தருமிக்கும் இந்த யோசனைக்கும் என்ன சம்பந்தம்னு கேக்கவரீங்க, அதானே? சொல்றேன், சொல்றேன். அதுக்கு முன்னாடி இந்த கேள்விக்கு நான் என்ன பதில் சொன்னேன்னா,

“ஒரு விடைத்தாளை திருத்துறது சுலபம். ஆனா அந்த மாணவனுக்கு நீ எங்க சரியாப் பண்ணுற எங்க சரியப் பண்ணலன்னு அவனோட தவறுகளப் பட்டியலிட்டு அதுக்கான வழிமுறைய சொல்றது கஷ்டம். இதுல ரொம்ப கஷ்டமான பகுதி எதுன்னா தவறுகளைப் பட்டியலிடறது தான். எனக்கு அந்த பட்டியலிடுற வேலை பிடிக்காது. எப்படின்னு அத தவிர்க்கிறதுன்னு யோசிச்சேன். இந்த யோசனை வந்தது, அவ்வளவு தான்.” ‘ அட, நம்மளால இவ்வளவு தன்னடக்கமாகூட பேச முடியுமா?’

இவ்வளவு நல்ல யோசனை எப்போ வெளிச்சத்துக்கு வந்துருக்கணும்? தோனினவுடனே, இல்லையா? அதான் இல்லை. இங்கதான் நம்ம தருமி நிக்கிறாரு.

தருமி தலைவனுக்கும் இடையிலுள்ள மெல்லிசான கோடு
தருமிக்கும் தலைவனுக்கும் இடையிலுள்ள மெல்லிசான கோடு

தருமின்னவுடனே திருவிளையாடல் நாகேஷ்தான் நமக்கு நினைவுக்கு வருவாரு. அந்த உருவம், நடை, உடை, பாவனை, அவர் கேள்வி கேட்ககேட்க  சிவன் பதில் சொல்லசொல்ல, நாகேஷோட உடம்பு பின்னாடி வளைஞசுகிட்டே  போகும்பாருங்க. வேற யாராலும் இப்படி வெளுத்து வாங்கியிருக்கமுடியுமான்னு யோசிக்ககூட முடியல. அவரோட மனசு. “ஆயிரம் பொன்னாச்சே.சொக்கா”ன்னு தவிப்பாரு. அத்தனையும் எனக்கே எனக்கான்னு ஒரு சந்தேகம் வேற.

நிறையபேரோட மனசு தருமி மாதிரிதான். எல்லாம் எனக்கே. ஆனா எல்லாத்தையும் நம்மளால பண்ண முடியாது. இந்த யோசனையும் அப்படித்தான். தோணி ஒருமாசமாச்சு. யோசனை நம்மளோடது; ஆனா, இந்த யோசனையையும் நம்மளே செயல்படுத்தனும்னு நெனைக்கிறப்போ தான் பிரச்சினை. வேற யாரும் அந்த புகழ்ல பங்குவாங்கிடக்கூடாது. எல்லாம் எனக்கே. ஒருமாசம் கழிச்சு மனசாட்சி சொல்லுது, “தம்பி, உன்னால இதப் பண்ணமுடியாது. இத யாரால செய்யமுடியுமோ அவன கூடசேர்த்துக்கோ.”

அப்புறம் தான் நமக்கு எப்பவோ படிச்ச திருக்குறள்லாம் நினைவுக்கு வருது.

இதனை இதனால் இவன்முடிக்கு மென்றாய்ந்து // அதனை அவன்கண் விடல்

இததான் “delegation”-னு சொல்லுவாங்க.

எப்போ எல்லாம் நான்தான், எல்லாம் எனக்குத்தான்னு நினைக்குறோமோ அப்ப தருமியா இருக்கோம். எப்போ இத நம்மளைவிட ஒருத்தன் நல்லா பண்ணுவான், அவன்கிட்ட அதவிட்டுட்டோம்னா நல்லதுன்னு புரிஞ்சுக்கிறோமோ அப்போ தலைவனாய்டுறோம். “அய்யய்யோ, என்னால முடியாதுன்னு எப்படி சொல்றது?” முடியும், எல்லாத்தையும் நம்மளால செய்யமுடியும். ஆனா ஒருசில விஷயத்ததான் நம்மளால நல்லா செய்யமுடியும். நம்ம நல்லா செய்றதுல கவனத்த செலுத்தி, மத்தத வேற யார் நல்லா செய்வாங்களோ அத அவங்ககிட்ட விட்டுடனும். அதுதான் தருமிலேர்ந்து தலைவனாகுற ‘மொமென்ட்’.

நல்லா கேட்டுக்கோங்க. ஒரு மெல்லிசான கோடு. கோட்டுக்கு அந்தபக்கம் தருமி, கோட்டுக்கு இந்தபக்கம் தலைவன். ஒரு சிச்சுவேஷன் வரும்போது யோசிச்சு முடிவேடுத்தீங்கன்னா நீங்க தலைவன். யோசிக்காம அடம்புடிச்சிங்கன்னா நீங்க தருமி.

நீங்க தருமியா? தலைவனா?

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

Up ↑