Posts Tagged ‘பாரதிதாசன் பல்கலைக்கழகம்’

பாரதிதாசன் பல்கலைக்கழக தமிழ்ப்பேரவையின் ஐந்தாம் ஆண்டு தொடக்கவிழா கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை. விழாநாளின் காலைவரை கவிதைவாசிக்கும் எண்ணம் இல்லை. நண்பர் பேராசிரியர் அனிஷ் வற்புறுத்தி (வாசிக்க: “திட்டி”) பங்கேற்க வைத்தார். விழாதொடங்கி சிறிதுநேரம் ஆனபிறகும் கூட நான் தயாரகியிருக்கவில்லை. கவியரங்கம் தொடங்கியபின்னர் வந்து வாசித்தேன். பல்கலைக்கழக நூலகம் தகவல்திரட்ட மிகவும் உதவியாக இருந்தது.

ஆன்றதமிழ் அன்னைக்கு வணக்கம் – எனை
ஈன்ற தமிழ்மண்ணுக்கு வணக்கம்!
தமிழ்வளர தயைசெய்த சான்றோரே
உமது தாள்தொட்டு நான் வணங்க
தொடங்குகிறேன் இப்பொழுது
நீவிரெல்லாம் இணங்க

பாவேந்தன் பெயரிலே பல்கலைக்கழகமாம்
அப் பாவேந்தன் பெயரிலே தமிழ்ப் பேரவையும் திகழுமாம்!
வருடங்கள் நான்கை வழியனுப்பி வைத்துவிட்டு
ஐந்தாம் ஆண்டிற்கு ஆரத்தி எடுக்கின்றோம்.
ஐந்தாம் ஆண்டின் ஆரம்ப நாளிலே
தமிழன்னை முகத்தை தரிசிக்க விழைந்தேன் யான்!

தமிழை வாசிப்போர் பலர்
தமிழை பூசிப்போர் சிலர்
தமிழை சுவாசிப்போர் வெகுசிலர்.
தமிழை சுவாசிக்கும் மனமெல்லாம் இங்கு
சுகமாய் அமர்ந்திருக்க – நான்
வாசிக்கத் தலைப்பட்டேன் பிழையிருப்பின் பொறுக்க.

தமிழன்னை முகத்தை தரிசிக்கும் பொருட்டு
கண்களை மூடினேன் காட்சியெல்லாம் இருட்டு.
மெல்ல விலகிற்று இருள்; பெற்றேன் தமிழன்னை அருள்
உரைப்பேன் கேளீர் – நான் உணர்ந்த பொருள்.

கண்ணிரண்டு முதலில் ஒளிவீசியது மெல்ல – அவை
இருட்டில் ஒளிர்கின்ற இருவைரக் கல்லே.
கிள்ளிவைத்த பிறை – அவளுக்கு அள்ளிவைத்த அழகுநுதல்
சிகைகொண்ட நிறமென்றால்
பழந்தமிழன் உள்ளத்தில் இருந்திராத கருமை.

மெல்ல மாறியது காட்சி
தமிழ்த்தாயின் முகம் மாறியது மெல்ல.

கண்ணாடி அணிந்த கண்கள் – ஆனாலும்
காந்தம் குறையாத கண்கள்.
பரந்த நெற்றி கருஞ்சிகை எல்லாமாய்
என்றோ, எங்கோ, எதிலோ பார்த்த முகம்.

நினைவு அணுக்களை நிமிண்டிப்பார்த்தேன்.
நினைவில் வந்தது அந்த பாசமுகம்
அடடா அதுதான் பாரதிதாசன் முகம்.
தமிழன்னை தன்னை – அந்தத் தமிழ்மகனில் தரிசித்தேன்.

சுயம்கெட்டு, சுகம்கெட்டு
அடிமைத்தளையைத் தமிழர் ஆதரித்துவந்த நேரம்
தமிழ்த்தேரதிர வந்தான் – பாட்டிசைத்து
இந்தப் பாரதிர வந்தான்
எட்டயபுரத்து பாரதி தான்.
அந்த பாரதிக்கு இவன் தாசன்
நல்ல தமிழ்நேசன்.

இந்த தமிழ்ச்சிலையை சிதுக்கியது ஓர் உளி.
ஆம், அவன் ஆசிரியர் திருப்புளி(ச்சாமி).

புதியதோர் உலகுசெய்ய
புதுப்பூப்பாதை போட்டுத்தந்தான்
அந்த பூப்பாதை – அழகுதமிழ்ப் பாப்பாதை.

பூட்டிய இரும்புக்கூட்டின் கதவுடைத்தான்.
அடைபட்டுக்கிடந்த தமிழ்ப்பறவைக் கூட்டம்
தளையறுத்து வந்தது – பகைமைத்
தலையறுக்க வந்தது.

வாளைச்சுழற்றும் விசையினிலே – இந்த
வையமுழுதும் துண்டுசெய்வேன் எனச்சொல்லி – வீணே
நாளைக்கழிக்கும் மனிதரிடை
நடமாடும் தெய்வமானான் இப்பாரினிடை.

பாட்டுக்கு ஒருதலைவன் பாரதியின்முன்னே
பாவேந்தனின் முதல்பிரசவம் – சுகப்பிரசவம்.
பிறந்தகுழந்தை பெண்குழந்தை.
ஆம்
பாவேந்தன் பெற்றெடுத்த சக்தி
பாரதிக்கு பிடித்த சக்தி!

தீமையைச் சுட்டது புரட்சிக்கவியின் வார்த்தைகள் மட்டுமல்ல
அவனது தோட்டாக்களும் தான்.
ஆஷ் துரையைச் சுட்டது அவன் துப்பாக்கி.

தமிழுக்குத் தொண்டுசெய்வோன்
சாவதில்லை எனச்சொன்னான்.
அதனால்தான் அவனது எழுபதாம் அகவையில்
அழைக்கவந்த மரணம்கூட
தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்தது.

தமிழ்முழக்கம்செய்த அவன் படைப்புகளில்
அமிழ்து எதுவென்றால்
தீர்ப்பளிப்பார் யாரோ?

தமிழ்ப்பகலவனின் நினைவுகளில் நான் சிறிதுமூழ்க
இழந்ததென்னவோ நித்திரை ஓரிரவு.
ஆனாலும் எனக்கு லாபம் இத்தனை தமிழுறவு.
வாய்ப்பளித்த சான்றோரே நவில்கின்றேன் நன்றி.

Advertisements