Posts Tagged ‘சீக்ரெட் ஆப் மெலுஹா’

“ஏன் உம்முன்னு இருக்க?”

“ஒன்னுமில்லையே”

“அப்படியா, ஆனா முகத்த பார்த்தா வாட்டமா இருக்கு?”

“அதெல்லாம் ஒன்னுமில்லன்னு சொல்றேன்ல.”

“இப்போ நீ சிரிக்கலன்னா சேரனோட ‘பொக்கிஷம்’ படத்த பாக்க வச்சுருவேன்.”

“எது? ஆர்ட் படமும் இல்லாம கமெர்ஷியல் படமும் இல்லாம ஒன்னு எடுத்தாரே அதுவா? அய்யய்யோ!”

சிரிப்பு.

“செம மொக்க படம்ல!”

“ஆமாமா, ஒரு சிறுகதையா வரவேண்டியத ஒரு படமா எடுத்தா வேற என்ன ஆகும்?”

“சரிதான், இப்போ விட்டிருந்தா 20 நிமிஷக் குறும்படமா எடுத்துருப்பாங்க. கொஞ்சம் பார்க்கிற மாதிரி இருந்திருக்கும்.”

“சில சமயம் ‘ஆட்டோக்ராப்’ படம் பார்க்கிறோமோன்னு சந்தேகம் வந்துடும். அதுல யானை கட்டிகிடக்கிற வீட்டுக்கு டிரஸ்ஸ மாத்தி மாத்தி போட்டுக்கிட்டு போவாரு; இங்க போஸ்ட்பாக்ஸ். ரெண்டு படத்திலயும் பேக்ரவுண்டுல பாட்ட போட்டுட்டு இவர காமிச்சுகிட்டே இருப்பாங்க. எப்போடா படம் முடியும்னு இருக்கும்.”

“ஆனா, நாம ஏன் கடைசி வரைக்கும் படம் பாத்தோம்னு நினைவிருக்கா?”

“நல்லா! ஒன்னு, நமக்கு வெளியில போயி வேற வேலை இல்ல. அப்புறம், நீ சொன்ன, ‘எப்போதாண்டா கதை வருதுன்னு பார்க்கலாம்’னு.”

மறுபடியும் சிரிப்பு.

“வந்துச்சுல்ல, கிளைமாக்ஸ்ல!”

சற்றுநேர அமைதி. பொக்கிஷத்தின் இறுதிக்காட்சி ஓடிக்கொண்டிருந்தது, மனதில். கடைசி இரண்டு நிமிடங்கள் வரை சேரனின் ‘அமர’காதலைப் பத்தியே தான் படம் இருக்கும். அவரு பீல் பண்றது, காதலிக்கு லெட்டர் லெட்டெரா அனுப்புறது, நாகூருக்கு போறது, அப்புறம் காதலிக்கு என்ன ஆச்சுன்னு தெரியாம கலங்கிபோய், அப்பாவோட வற்புறுத்தல் தாங்காம அவர்சொன்ன பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு, ஒரு பையன பெத்துட்டு, வயசாகி  போய் சேர்ந்துடுறதுன்னு, பயங்கரமா அவருக்கு ‘பில்டப்’ குடுப்பாங்க. சேரனோட பையன் அவர் டைரிய படிச்சுட்டு, காதலிய தேடிக் கண்டுபிடிச்சு, அப்பாவோட ‘அன்போஸ்டட்’ காதல் கடிதங்கள ‘டெலிவர்’ பண்ணபோவாரு. அந்தம்மாவும் பீல் பண்ணி பேசிட்டு, அவங்க தங்கச்சி — அதாங்க சேரனோட மனைவி — அவங்ககிட்டயும் பேசிட்டு, பையன வழியனுப்பிடுவாங்க.

இங்க தான் கதையில வைக்கிறாரு ‘டிவிஸ்டு’.

சேரனோட காதலி தனக்குள்ளயே பேசிக்கிறமாதிரி காட்சி வரும். அப்போதான் நமக்கே தெரியும் அவங்க கல்யாணமே பண்ணிக்கலன்னு. இதுதான் உண்மையான காதல்ன்ற மாதிரி படத்த முடிப்பாரு. படம் முழுக்க சேரனோடவே பிரயாணம்பண்ணிட்டு, திடீர்னு எதிர்பக்கத்துலருந்து பார்க்கிறப்போ தான் தெரியும், சேரன் காதலைவிட அந்தம்மாவோட  காதல் எவ்வளவு உசத்தியானதுன்னு.

“படத்தோட ஓன்லைனர் நல்ல இருக்கும். ஆனா படத்தையும் ஒன்லைனராவே சொல்லியிருந்தா நல்லாயிருந்துருக்கும்.”

“‘ஆட்டோக்ராப்’, ‘வெற்றிக்கொடிகட்டு’ படத்த எடுத்த சேரன்தான் ‘பொக்கிஷம்’ படத்த எடுத்தார்னு சொன்னா சமயத்துல நம்பவே முடியல.”

“யானைக்கும் அடிசறுக்கும்ல.”

“ஆமாமா.”

” நீ ‘செக்ரெட் ஆப் மெலுஹா’ படிச்சியா?”

“படிச்சனே. கதைசொன்ன விதம் ரொம்ப அருமைல?”

“சிவன் ஒரு சாதாரண மனிதனா இருந்திருந்தா எப்படியிருந்திருக்கும்னு சொல்ல முயற்சிபண்ணியிருப்பாரு. அந்த முயற்சியில வெற்றியும் அடைஞ்சிருப்பாரு.”

“ஆமாமா, கதாபாத்திரங்கள  கோர்த்தவிதமாகட்டும், கதைய எடுத்துட்டுபோறதாகட்டும், அமிஷ் நல்லாவே பண்ணியிருப்பாரு.”

“உள்ளூர்க்காரன்னா இளக்காரம், வெளியூர்க்காரன்ன பொன்னாடையா?”

“அய்யய்யோ, இது என்ன திடீர்னு ‘கரகாட்டக்காரன்’ சந்திரசேகர்  மாதிரி கொடிபுடிக்கிற?”

சிரிப்பு.

“சரி, ‘பொக்கிஷம்’ படத்துக்கும் ‘சீக்ரெட் ஆப் மெலுஹா’ கதைக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு, என்ன சொல்லு பார்ப்போம்?”

“ம்,  ரெண்டுலயுமே கதையோட இறுதிகட்டத்துல, வேற ஒரு கோணத்துல கருத்த பதிவு பண்ணிருப்பாங்க.”

“சரியா சொன்ன. ரெண்டுக்கும் ஒரு முக்கியமான வேற்றுமை இருக்கு. அது என்ன?”

“படம் படுத்தும், கதை பட்டய கிளப்பும், சரியா?”

சிரிப்பு.

“சரி இப்போ ஏன் நீ திடீர்னு இந்த ரெண்டையும் பத்தி பேசுற?”

“சபாஷ், சரியான கேள்வி கேட்ட. தகவல்பரிமாற்றத்துல ஒரு முக்கியமான விஷயத்த நாம கவனிக்கணும். அது என்ன?”

“ஏய்,  நீ இன்னைக்கு ஓவரா கேள்வி கேக்குற.”

“அதனால என்ன, பதில் தெரிஞ்ச கேள்வியாதானே கேக்குறேன்.”

“இரு யோசிக்கிறேன். நிறைய இருக்கு, நீ எதை எதிர்பார்க்குறன்னு தெரியல.”

“ஒரு குறிப்பு குடுக்கிறேன். போன வாரம் சாரதா ஆண்ட்டிகூட fb-ல அந்த கருத்த பதிவு செஞ்சிருந்தாங்க.”

“ஆங், புரிஞ்சுடிச்சு என்ன சொல்ல வரேன்னு.”

“சொல்லு, சரியான்னு பார்ப்போம்.”

“தகவல் பரிமாற்றத்துல முக்கியமான விஷயம் சொல்லப்படற விஷயத்த புரிஞ்சுக்கிறதுக்காக கேக்குறது, பதில் சொல்றதுக்காக இல்ல. அழகா சொல்லனும்னா

பிறருக்கு பதிலலிப்பதற்காக பிறர்கூறுவதை கவனிக்காதீர்கள்; பிறர்சொல்வதை புரிந்துகொள்வதற்காக கவனியுங்கள்

The biggest communication problem is we do not listen to understand. We listen to reply.

“ரொம்ப சரி. இப்போ ‘பொக்கிஷம்’ படம் என்னதான் மொக்கயா இருந்தாலும் இறுதிக்காட்சிய பாக்கலைன்ன கதை புரிஞ்சிருக்குமா?”

“புரிஞ்சிருக்காது.”

“‘சீக்ரெட் ஆப் மெலுஹா’ என்னதான் நல்லா எழுதப்பட்டிருந்தாலும் கடைசி சிலபக்கங்கள படிக்கலைன்னா என்னவாகியிருக்கும்?”

“நம்மால கதைய ரசிச்சிருக்க முடியும், ஆனா சிவன் எப்படிப்பட்ட ஒரு குற்ற உணர்ச்சிக்கு ஆளானார்னு தெரிஞ்சிருக்காது.”

“ஸோ?”

`”ரசிக்கிறதா இருந்தாலும்சரி, கிழிக்கிறதா இருந்தாலும்சரி முழுசா படிக்கணும் அல்லது பார்க்கணும்.”

“அதே.”

“ஏய், நீ கடைசியில இங்க வரியா, அடப்பாவி!”

“நான் முதல்லேர்ந்தே அங்கதான் இருக்கேன்.”

“Okay, I stand corrected.”

“ஓய், நீ இப்போ எதுக்கு பீட்டர்க்கு மாறுற?”

சிரிப்பு.

Advertisements