Posts Tagged ‘அமாவாசை’

ஆலய தரிசனம் முடிந்து மருத்துவமனையை அடைந்தபொழுது மணி பதினொன்றை நெருங்கிக்கொண்டிருந்தது. எங்களது முறை வருவதற்குக் காத்திருந்த நேரத்தில் மனைவியின் இரத்த அழுத்தம், எடை போன்ற முதல்நிலைக் காரணிகளை குறிக்கத் தொடங்கினார்கள். இரத்த அழுத்தம் இயல்பு நிலையில் இருந்தது. இருவரும் நிம்மதி பெருமூச்சு விட்டோம். கடந்த சில மாதங்களில் இரத்த அழுத்தம் இயல்பினும் சற்று அதிகமாகவே இருந்தது. நிபிடிபின் தயவில் இயல்புநிலையை தக்க வைத்துக்கொண்டிருந்தோம்.

சற்றுநேரக் காத்திருப்புக்குப் பின்னர், மருத்துவரை பார்க்க முடிந்தது.பரிசோதனைகளுக்குப் பின்னர் மருத்துவர் கேட்டார்,

“என்ன முடிவு பண்ணியிருக்கிங்க?”

“எதைப் பத்தி, டாக்டர்?”

எங்களை ஒருமாதிரியாக பார்த்துக்கொண்டே சிரிப்பு மாறாமல் கேட்டார்.

“என்னைக்கு பிரசவத்த வச்சுக்கலாம்?”

“ஓ, அதுவா? எங்களுக்கு எந்த preference-ம் இல்லை, டாக்டர்.”

மூவரும் சில நொடிகள் அமைதியாக இருந்தோம். மருத்துவர் இன்னும் எங்கள் பதிலுக்காக காத்திருந்தார். ஏற்கனவே 23-ம் தேதி நாள் குறித்திருந்தார். ஆனால் இரண்டு நாட்களுக்கு முந்தைய பரிசோதனையில் இந்த வாரத்தில் பிரசவத்தை வைத்துக்கொள்ளலாம் என்றும், எங்களுக்கு பிடித்த நாள் இருந்தால் சொல்லுமாறும் கேட்டிருந்தார். புதன்கிழமை அமாவாசை, வியாழன் பிரதமை, வெள்ளி ஆடி முதல் நாள். இன்றைக்கு தேதி 15. இன்னும் ஒரு வாரம் இருக்கும்பொழுது ஏன் வலியை உண்டுபண்ணி பிரசவிக்கவேண்டும் என்று தோன்றியது. இயல்பாக நடக்கட்டுமே. மருத்துவரிடம் சொன்னோம்.

‘அட முட்டாப்பயலே’ என்பது போல ஒருமுறை பார்த்தார்.

‘உங்களுக்கு நீர் குறைய ஆரம்பிச்சுடுச்சு. ஒருவாரம் விட்டோம்னா ரொம்ப சிக்கலாயிடும்.”

ஓ, அப்படியா சேதி, சற்றே அசடு வழிய நேர்ந்தது. ‘சென்னைலயா பிரசவத்த வச்சுக்க போற? நார்மல் டெலிவரிக்கு வாய்ப்பே இல்ல’ என்ற நண்பர்களின் ‘ஆலோசனை’யை மீறி, மருத்துவரின் பேச்சும் செயலும் ஒரு நம்பிக்கையை தந்திருந்தன. மருத்துவருக்கு மிகவும் தேவையான கனிவான பேச்சும், சிரித்த முகமும் இவரிடம் இருந்தது. பலசமயங்களில் அறிவார்ந்த அணுகுமுறையைத் தாண்டி உணர்வுபூர்வமான தேர்வுகள் சரியான முடிவுகளையே அளித்திருக்கின்றன. அதே நம்பிக்கை தான் துரோகத்தின் வலைபின்னப்படுவதற்கும்  காரணமாய் அமைந்திருக்கின்றன. சரியோ தவறோ பெரும்பாலான முடிவுகள் உணர்வின் தூண்டலிலேயே எடுக்கப்படுகின்றன.

தவறாகிவிடக்கூடாது என்ற அச்சத்தை, நன்றாகவே நடக்கும் என்ற நம்பிக்கை வென்றது.

“சரி, டாக்டர். நீங்க சொல்றபடியே பண்ணிடலாம்.”

குழந்தை பிறக்கும் எந்த நேரமுமே நல்ல நேரமே என்ற கருத்தில்தான் இருவருமே இருந்தோம். குழந்தையே ஒரு வரம். இறையம்சத்தில் ஒரு பின்னம். அப்படியிருக்கையில் நல்ல நேரம் என்ன கேட்ட நேரம் என்ன? வளிமண்டலத்தை தொடும்முன் இருக்கிற தூய மழைநீரைப்போல குழந்தைகள். கள்ளம்கபடின்றி மகிழ்ச்சியை மட்டுமே தர வேறு எந்த படைப்பால் முடியும்?

“நல்லது, அப்போ இன்னைக்கே வச்சுக்கலாம்.”

“இன்னைக்கேவா!”

தெய்வமே நேரில் வந்தாலும் திடீரென்று வந்தால் என்ன செய்வது? ஒரு போனாவது பண்ணிட்டு வரவேண்டாமா? இனம்புரியாத மெல்லிய பயம் பரவத் தொடங்கியது.

“அமாவாசை பிரச்சினை இல்லைல? நாளைக்கு பாட்டிமுகம் வியாழக்கிழமை, அடுத்த நாள் ஆடி பொறக்குது.”

இவர் என்ன மருத்துவரா இல்லை ஜோசியரா?

இந்த குழந்தை இன்று வரவேண்டுமேன்றிருந்தால் இன்று பிறக்கும். நாமாக நாள் பார்த்தால்கூட அந்த நாள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதாகவே இருக்கும். இந்த நாள் நல்ல நாள்.

தலையாட்டினோம்.

“சரி, அப்போ அட்மிட் பண்ணிடுங்க. கூட யார் இருக்காங்க?”

யாரும் இல்லை. இருவரின் அம்மாக்களும் அப்பாக்களும் வார இறுதியில் வருவதாகத் தான் திட்டம். ஒரு பேச்சுக்கு ஆதித்யன்கூட இல்லை.

மறுபடியும் கேட்டார்: “கூட யார் இருக்காங்க?”

யாரும் இல்லை.

அடுத்து: 03. வலி

Advertisements