என்னதான் நாம T20-ல வல்லரசா இருந்தாலும், நம்ம மக்கள் இன்னும் கட்டுப்பெட்டி கர்நாடகமாவே இருக்காங்க. என்னது, T20-ல நம்ம இல்லையா? தென் ஆப்ரிக்கா தான் சேம்பியனா? அட நான் கிரிக்கெட்ட சொல்லலைங்க. 2020-ல இந்தியா வல்லரசாகுறது பத்தி சொல்றேன். அப்துல் கலாம் சொன்னாரே அது. இந்தியா வல்லரசாகுறது என்னவோ பெண்கள் கையில தான் இருக்குன்றது என்னோட நம்பிக்கை. ஆனா பெண்கள் இன்னும் 50 வருஷம் பின்னாடி தான் இருக்காங்கன்றது என்னோட அனுபவம். நான் சொல்றத நம்பலைன்னா மருந்துக்கடை பக்கமா போய் நின்னு பாருங்க. தலைவலி மாத்திரை, சளிக்கு ‘சிரப்’னு வாங்குறவங்க நேரா போய் வேணுங்கிறத கேட்டு வாங்கிடுவாங்க. ஆனா சில பேரு கடைக்காரப் பையன் இல்லன்னாலும் ஓரமா போய் நிப்பாங்க. அப்படி நின்ன உடனே கடைக்காரப்பையன் ஒருத்தர் வந்து நிப்பாரு. இவங்க அவர்க்கு மட்டும் கேக்குற மாதிரி எதோ விஸ்பர் பண்ணுவாங்க. அவரும் ஓரமா போய் எதையோ எடுத்து ஒரு பைக்குள்ள வச்சி அப்புறமா தான் கண்ணாடிப் பெட்டிக்கு வெளியே எடுத்து ரகசியமா குடுப்பாரு. என்னமோ தெரியல இதுக்காகவே வாங்கிருப்பாங்க போல, கருப்பு பாலிதீன் பை.

அன்னைக்கு அப்படித்தான் நான் மருந்துக்கடைக்கு போய் வண்டிய நிறுத்துறேன், என்கூட கல்லூரில படிச்ச பொண்ணு அவ கணவரோட கருப்பு பை வாங்கிட்டு வெளியே வருது. அதாவது கருப்பு பையில் எதோ வாங்கிட்டு வருது. நான் அந்த பொண்ணப் பாத்து சிரிச்சுட்டு எப்படிருக்கன்னு கேட்டுட்டு, வழக்கமா கேக்குற நம்ம தேசிய கேள்வியக் கேட்டேன்: “எங்க இந்த பக்கம்? மருந்து வாங்கவா”? ஒரு நிமிஷம் அவ முகம் மாறிடுச்சு; ஆனா சமாளிச்சுட்டு சிரிச்சுகிட்டே “அது சரி நீ எங்க இந்த பக்கம்?” னு பதில் கேள்வி கேட்டா. நான் வாய தொறக்குறேன், தொண்டை வறண்டு போய் காத்து தான் வருது. இருந்தாலும் சமாளிச்சுக்கிட்டு நான் சொன்னேன்: “கா…காண்… காண்… காம்ப்ளான் வாங்க வந்தேன், என் பையனுக்கு. அவனுக்கு ஹார்லிக்ஸ் ரொம்ப பிடிக்கும்.”  உளறிட்டனோ? நெத்தில ரெண்டு முத்து வியர்வை வேற. அவளும் நக்கலா சிரிச்சுகிட்டே அவ கணவன்கிட்ட சொன்னா “போலாம்.” அவங்க வண்டி நகருது; அவ சொல்றா “இவன்லாம் இருக்குறப்ப இந்தியா எங்க வல்லரசாகுறதுன்னு?”

ஆமா, எல்லார் கவலையுமே இந்தியா வல்லரசாகுறது தானா?

போராட்ட அலைகள்

Posted: நவம்பர் 7, 2015 in கவிதை
குறிச்சொற்கள்:,

பெருங்கோபம் கொண்டு,
ஆங்காங்கே எழுந்து,
வேகமாய்த் திரண்டு,
ஒன்றாய் அணிவகுத்து,
ஓங்கிக் குரலெடுத்து,
கோரிக்கை எழுப்புகையில்
‘பொசுக்’கென்று விழுகின்ற
போராட்டக்காரனாய்
அடங்கித் திரும்பும்
ஆரவார அலைகள்.

கனவு

Posted: நவம்பர் 1, 2015 in முகவுரை
குறிச்சொற்கள்:, ,

உலகு விடியலை வரவேற்கத தயாராகிக் கொண்டிருந்தது. உடலெங்கும் வியர்த்து விழித்திருந்தேன். அதிகாலை கனவு பலிக்குமோ? கண்ணைக் குத்தி விடுவேன் என்று சின்ன வயதில் மிரட்டப்பட்ட போது கூட இப்படி கனவு வந்ததில்லை. இரண்டு குழந்தைகளுக்கு தகப்பனான பிறகு இப்படி ஒரு கனவு என்று சொன்னால் என் பையனே என்னைப் பார்த்து சிரிப்பானே என்று சற்று வெட்கமாகவும் கவலையாகவும் இருந்தது. நீங்களே சிரித்தாலும் சிரிப்பீர்கள். சரி கனவு என்னன்னு சொன்னால் தானே உங்களுக்கும் கொஞ்சம் புரியும்.

கனவில் வந்தது யாருன்னா, உம், சிரிக்கக் கூடாது, தமிழ்த்தாயே தான். சிரிக்கக் கூடாதுன்னு இப்போ தானே சொன்னேன். பிரச்சினை என்னன்னா உரிமைப்பிரச்சினை தான். முதல் வகுப்பு படிக்கும்போதே திருக்குறள்-ல ரெண்டு அதிகாரம் மனப்பாடம் பண்ணி ஒப்புவிச்சு முதல் பரிசு வாங்கினதிலேர்ந்து காதல் கவிதை வரைக்கும் எல்லாத்தையும் தமிழ்ல எழுதிட்டு இப்போ வலைப்பூவில் எழுதுறது மட்டும் ஆங்கில இலக்கணம் பத்தின்னா யாருக்கு தான் கோவம் வராது? தமிழ்த்தாய் சொன்னதும் அதே தான்.

மரியாதையா தமிழ்ல ஒரு வலைப்பூ ஆரம்பி இல்லன்னா கண்ணைக் குத்திடுவேன். இல்லை, இல்லை, ஆங்கிலத்தில் டைப் அடிக்கிற கையக் குத்திடுவேன்னு ஒரே மிரட்டல். நான் சொன்னேன், “தாயே, தமிழ் இலக்கணம் பத்தி வலைப்பூ ஆரம்பிக்கிற அளவு நான் பெரிசா படிக்கலை”ன்னு.  “–யே, தமிழ் இலக்கணம் பத்தி வலைப்பூ ஆரம்பிச்சேன்னா, கண்ணு கையெல்லாம் இல்லை, நேரடியா நெஞ்சக் குத்தி உலகத்த விட்டே அனுப்பிடுவேன்”னு அன்பா சொன்னுச்சு.

சரி, அப்போ நான் எதைப் பத்தி எழுதணும்னு கேட்டேன். எதையாவது எழுது, ஆனா எழுது. நீ என்ன எழுதினாலும் “முருகி, சூப்பரா எழுதிருக்கே”ன்னு சொல்றதுக்கு நாலு பேரு இருக்காங்கல்லன்னு நக்கல் வேற. சரி கண்ணும் கையும் முக்கியமாச்சே. எழுதலாம்னு களத்துல எறங்கிட்டேன். நமக்கு தான் அசை போடுறதுக்கு ஏகப்பட்டது இருக்கே, பின்ன என்ன கவலை.

நீங்களும் வழக்கம் போல ரெண்டு லைக், நாலு கமெண்ட்-னு போட்டு ஆதரவு குடுங்க. எனக்காக இல்லைன்னாலும் தமிழ்த்தாய்க்காக. நம்ம என்னைக்கு நம்மளுக்காக கேட்டுருக்கோம்?