Archive for the ‘சிந்தனை’ Category

2000 அல்லது 2001 என்று நினைக்கிறேன். நண்பர் ஒருவர் கொடுத்த கவிதைத்தொகுப்பை வாசித்த பொழுது ஒருவித பரவசம் பாய்ந்திருந்தது. “கந்துகம்” என்ற ஒரு பெயர் மட்டும் நினைவில் இருக்கிறது. மற்றபடி நூலாசிரியர் பற்றியோ, பதிப்பகம்குறித்தோ எந்த நினைவும் இல்லை. கவிதைகள் இப்போது நினைவில் இல்லை; ஆனால் நினைவுகளோடு சேர்ந்த நறுமணம் போல் அந்நூலைப் பற்றி நினைக்கும் போது அந்நூலை வாசித்த அனுபவம் பரவசமாய் நினைவில் நிழலாடுகிறது. “திணை மயக்கம்” என்றொரு கவிதை மட்டும் எனக்கு என்றும் மறக்காத, மிகவும் எளிதாக என் மனதில் வந்தமர்ந்த கவிதை.
அன்று
நஞ்சை உண்டு
சாகுபடியானது.
இன்று
நஞ்சை உண்டு
சாகும்படியானது.
விவசாயத்தின் அழிவை, விவசாயியின் அழிவை எனக்கு தெரிந்தவரை இவ்வளவு சுருக்கமாக, சுருக்காக, சொல்ல முடியுமா தெரியவில்லை.
இந்நூலை படித்தவர்களோ கிடைத்தவர்களோ இருந்தால் தெரியப்படுத்துங்கள். நன்றியுடன் இருப்பேன்.
இப்பொழுது இக்கவிதை நினைவுக்கு வரக் காரணம், வாலியின் நினைவு நாடாக்கள், அத்தியாயம் 27, “இரு தலைப்புக்கள்”.
அப்போதைய பம்பாயில் ஒரு கட்டிடம் இடிந்துவிழுந்தது குறித்த செய்தி, Times of India-வில். தலைப்பு:
Sons of Toil – Under Tons of Soil
வாலி சுருங்கச் சொல்லும் சூத்திரத்தைக் கற்றதாகக் குறிப்பிட்ட தலைப்பு. அதன் தாக்கமாக, அவர் எழுதிய சில வரிகளை பகிர்ந்திருந்தார். “நஞ்சை”க் கவிதைக்கு ஒப்பான சில வரிகள், உடன் மனதுக்குள் குடி புகுந்தன.
கோவலன் பற்றி, வாலியின் வரிகள்:
புகாரில் பிறந்தவன்
புகாரில் இறந்தவன்.
என்னே சொற்சுருக்கம்! ஒற்றைச் சொல்லில் ஒருவன் வாழ்க்கையை யாரால் சொல்லமுடியும்.
மகாகவி கண்ணதாசனின்
மரணத்திற்கு காரணம்
மதுவருந்தியது – இது தெரிந்து
மது வருந்தியது.
கோவலன் கவிதைகூட சொல்மாற்றி வந்த சுகம். இது ஒரு space மாறியதால் வந்த grace.
பூஜ் பூகம்பம்:
இவர்கள்
கண் மூடியதால்
மண் மூடியவர்களல்ல;
மண் மூடியதால்
கண் மூடியவர்கள்.
சொற்களை மாற்றிப் போட்டு, சோகத்தை சுமந்து வந்த வரிகள்.

 

வாலி!
ஸ்ரீரங்கம் கடைந்த எழுத்தாணி.
அவனை
உயர்த்திப் பிடித்தது
தமிழ் எழுத்தேணி.
அவன்
காவிரி தந்த ஊருணி
அவன் கவிதை
தமிழ் வகுத்து நின்ற சீரணி.
Advertisements

“ஏன் உம்முன்னு இருக்க?”

“ஒன்னுமில்லையே”

“அப்படியா, ஆனா முகத்த பார்த்தா வாட்டமா இருக்கு?”

“அதெல்லாம் ஒன்னுமில்லன்னு சொல்றேன்ல.”

“இப்போ நீ சிரிக்கலன்னா சேரனோட ‘பொக்கிஷம்’ படத்த பாக்க வச்சுருவேன்.”

“எது? ஆர்ட் படமும் இல்லாம கமெர்ஷியல் படமும் இல்லாம ஒன்னு எடுத்தாரே அதுவா? அய்யய்யோ!”

சிரிப்பு.

“செம மொக்க படம்ல!”

“ஆமாமா, ஒரு சிறுகதையா வரவேண்டியத ஒரு படமா எடுத்தா வேற என்ன ஆகும்?”

“சரிதான், இப்போ விட்டிருந்தா 20 நிமிஷக் குறும்படமா எடுத்துருப்பாங்க. கொஞ்சம் பார்க்கிற மாதிரி இருந்திருக்கும்.”

“சில சமயம் ‘ஆட்டோக்ராப்’ படம் பார்க்கிறோமோன்னு சந்தேகம் வந்துடும். அதுல யானை கட்டிகிடக்கிற வீட்டுக்கு டிரஸ்ஸ மாத்தி மாத்தி போட்டுக்கிட்டு போவாரு; இங்க போஸ்ட்பாக்ஸ். ரெண்டு படத்திலயும் பேக்ரவுண்டுல பாட்ட போட்டுட்டு இவர காமிச்சுகிட்டே இருப்பாங்க. எப்போடா படம் முடியும்னு இருக்கும்.”

“ஆனா, நாம ஏன் கடைசி வரைக்கும் படம் பாத்தோம்னு நினைவிருக்கா?”

“நல்லா! ஒன்னு, நமக்கு வெளியில போயி வேற வேலை இல்ல. அப்புறம், நீ சொன்ன, ‘எப்போதாண்டா கதை வருதுன்னு பார்க்கலாம்’னு.”

மறுபடியும் சிரிப்பு.

“வந்துச்சுல்ல, கிளைமாக்ஸ்ல!”

சற்றுநேர அமைதி. பொக்கிஷத்தின் இறுதிக்காட்சி ஓடிக்கொண்டிருந்தது, மனதில். கடைசி இரண்டு நிமிடங்கள் வரை சேரனின் ‘அமர’காதலைப் பத்தியே தான் படம் இருக்கும். அவரு பீல் பண்றது, காதலிக்கு லெட்டர் லெட்டெரா அனுப்புறது, நாகூருக்கு போறது, அப்புறம் காதலிக்கு என்ன ஆச்சுன்னு தெரியாம கலங்கிபோய், அப்பாவோட வற்புறுத்தல் தாங்காம அவர்சொன்ன பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு, ஒரு பையன பெத்துட்டு, வயசாகி  போய் சேர்ந்துடுறதுன்னு, பயங்கரமா அவருக்கு ‘பில்டப்’ குடுப்பாங்க. சேரனோட பையன் அவர் டைரிய படிச்சுட்டு, காதலிய தேடிக் கண்டுபிடிச்சு, அப்பாவோட ‘அன்போஸ்டட்’ காதல் கடிதங்கள ‘டெலிவர்’ பண்ணபோவாரு. அந்தம்மாவும் பீல் பண்ணி பேசிட்டு, அவங்க தங்கச்சி — அதாங்க சேரனோட மனைவி — அவங்ககிட்டயும் பேசிட்டு, பையன வழியனுப்பிடுவாங்க.

இங்க தான் கதையில வைக்கிறாரு ‘டிவிஸ்டு’.

சேரனோட காதலி தனக்குள்ளயே பேசிக்கிறமாதிரி காட்சி வரும். அப்போதான் நமக்கே தெரியும் அவங்க கல்யாணமே பண்ணிக்கலன்னு. இதுதான் உண்மையான காதல்ன்ற மாதிரி படத்த முடிப்பாரு. படம் முழுக்க சேரனோடவே பிரயாணம்பண்ணிட்டு, திடீர்னு எதிர்பக்கத்துலருந்து பார்க்கிறப்போ தான் தெரியும், சேரன் காதலைவிட அந்தம்மாவோட  காதல் எவ்வளவு உசத்தியானதுன்னு.

“படத்தோட ஓன்லைனர் நல்ல இருக்கும். ஆனா படத்தையும் ஒன்லைனராவே சொல்லியிருந்தா நல்லாயிருந்துருக்கும்.”

“‘ஆட்டோக்ராப்’, ‘வெற்றிக்கொடிகட்டு’ படத்த எடுத்த சேரன்தான் ‘பொக்கிஷம்’ படத்த எடுத்தார்னு சொன்னா சமயத்துல நம்பவே முடியல.”

“யானைக்கும் அடிசறுக்கும்ல.”

“ஆமாமா.”

” நீ ‘செக்ரெட் ஆப் மெலுஹா’ படிச்சியா?”

“படிச்சனே. கதைசொன்ன விதம் ரொம்ப அருமைல?”

“சிவன் ஒரு சாதாரண மனிதனா இருந்திருந்தா எப்படியிருந்திருக்கும்னு சொல்ல முயற்சிபண்ணியிருப்பாரு. அந்த முயற்சியில வெற்றியும் அடைஞ்சிருப்பாரு.”

“ஆமாமா, கதாபாத்திரங்கள  கோர்த்தவிதமாகட்டும், கதைய எடுத்துட்டுபோறதாகட்டும், அமிஷ் நல்லாவே பண்ணியிருப்பாரு.”

“உள்ளூர்க்காரன்னா இளக்காரம், வெளியூர்க்காரன்ன பொன்னாடையா?”

“அய்யய்யோ, இது என்ன திடீர்னு ‘கரகாட்டக்காரன்’ சந்திரசேகர்  மாதிரி கொடிபுடிக்கிற?”

சிரிப்பு.

“சரி, ‘பொக்கிஷம்’ படத்துக்கும் ‘சீக்ரெட் ஆப் மெலுஹா’ கதைக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு, என்ன சொல்லு பார்ப்போம்?”

“ம்,  ரெண்டுலயுமே கதையோட இறுதிகட்டத்துல, வேற ஒரு கோணத்துல கருத்த பதிவு பண்ணிருப்பாங்க.”

“சரியா சொன்ன. ரெண்டுக்கும் ஒரு முக்கியமான வேற்றுமை இருக்கு. அது என்ன?”

“படம் படுத்தும், கதை பட்டய கிளப்பும், சரியா?”

சிரிப்பு.

“சரி இப்போ ஏன் நீ திடீர்னு இந்த ரெண்டையும் பத்தி பேசுற?”

“சபாஷ், சரியான கேள்வி கேட்ட. தகவல்பரிமாற்றத்துல ஒரு முக்கியமான விஷயத்த நாம கவனிக்கணும். அது என்ன?”

“ஏய்,  நீ இன்னைக்கு ஓவரா கேள்வி கேக்குற.”

“அதனால என்ன, பதில் தெரிஞ்ச கேள்வியாதானே கேக்குறேன்.”

“இரு யோசிக்கிறேன். நிறைய இருக்கு, நீ எதை எதிர்பார்க்குறன்னு தெரியல.”

“ஒரு குறிப்பு குடுக்கிறேன். போன வாரம் சாரதா ஆண்ட்டிகூட fb-ல அந்த கருத்த பதிவு செஞ்சிருந்தாங்க.”

“ஆங், புரிஞ்சுடிச்சு என்ன சொல்ல வரேன்னு.”

“சொல்லு, சரியான்னு பார்ப்போம்.”

“தகவல் பரிமாற்றத்துல முக்கியமான விஷயம் சொல்லப்படற விஷயத்த புரிஞ்சுக்கிறதுக்காக கேக்குறது, பதில் சொல்றதுக்காக இல்ல. அழகா சொல்லனும்னா

பிறருக்கு பதிலலிப்பதற்காக பிறர்கூறுவதை கவனிக்காதீர்கள்; பிறர்சொல்வதை புரிந்துகொள்வதற்காக கவனியுங்கள்

The biggest communication problem is we do not listen to understand. We listen to reply.

“ரொம்ப சரி. இப்போ ‘பொக்கிஷம்’ படம் என்னதான் மொக்கயா இருந்தாலும் இறுதிக்காட்சிய பாக்கலைன்ன கதை புரிஞ்சிருக்குமா?”

“புரிஞ்சிருக்காது.”

“‘சீக்ரெட் ஆப் மெலுஹா’ என்னதான் நல்லா எழுதப்பட்டிருந்தாலும் கடைசி சிலபக்கங்கள படிக்கலைன்னா என்னவாகியிருக்கும்?”

“நம்மால கதைய ரசிச்சிருக்க முடியும், ஆனா சிவன் எப்படிப்பட்ட ஒரு குற்ற உணர்ச்சிக்கு ஆளானார்னு தெரிஞ்சிருக்காது.”

“ஸோ?”

`”ரசிக்கிறதா இருந்தாலும்சரி, கிழிக்கிறதா இருந்தாலும்சரி முழுசா படிக்கணும் அல்லது பார்க்கணும்.”

“அதே.”

“ஏய், நீ கடைசியில இங்க வரியா, அடப்பாவி!”

“நான் முதல்லேர்ந்தே அங்கதான் இருக்கேன்.”

“Okay, I stand corrected.”

“ஓய், நீ இப்போ எதுக்கு பீட்டர்க்கு மாறுற?”

சிரிப்பு.

“சார், இந்த ஐடியா உங்களுக்கு எப்படி வந்தது! செம.”

என்னோட முகம் செம்மையாகுறதை என்னால உணர முடிஞ்சது. பொதுவா இந்த மாதிரி கேள்விய நம்ம பாஸ் கேக்குறப்போ ஒரு ‘கெத்’தா இருக்கும். அந்த கேள்வில நம்ம திறமைக்கான அல்லது புத்திசாலித்தனத்துக்கான பாராட்டைத் தாண்டி, இந்த யோசனையால அலுவலகத்துல ஆளக் குறைக்க முடியுமா, ‘அவுட்புட்’ட அதிகமாக்க முடியுமா, வருமானத்துல எத்தன சதவிகிதம் வளரும்கிற விஷயங்கள் தான் முக்கியமானதா இருக்கும். இந்த கிளைக்கேள்விகளுக்கான பதிலைப் பொறுத்துதான் நம்ம யோசனையோட மதிப்பு தீர்மானிக்கப்படுது.

ஆனால் இதே கேள்வியை நாம் வழிநடத்தும் ஒருத்தர் கேட்கும்பொழுது — அதுவும் அவரோட கண்கள்ல மகிழ்ச்சிமின்ன கேட்கும்பொழுது — நமது யோசனை ஒரே ஒரு காரணியை மட்டுமே திருப்திப்படுத்துது: ‘உன்னுடைய யோசனை என் வேலையை எளிமையாக்கும்‘.

நம்ம பாஸ் இந்த கேள்விய கேக்கும்போழுது நம்மளோட அகங்காரத்துக்கு தீனி கிடைக்கிறது. வரிசையா பட்டியலிட பலகாரணங்களும்  கிடைக்குது. நம்மால வழிநடத்தப்படுறவர் இந்த கேள்வியை கேட்கும்போது ஒரே பதில்தான் இருக்குது.

அதுமட்டுமில்ல, நம்மால வழிநடத்தப்படுறவர்கிட்ட இந்த கேள்வி அரிதாவும் அமையுது. இன்றைக்கும் அப்படித்தான். நிச்சயமாக இந்த யோசனை ஒரு எரிச்சலான வேலையை எளிமையானதா மாத்தக் கூடிய யோசனை. எப்படின்னா, ஒரு கட்டிடப் பொறியாளர் இருக்கார்னு வெச்சிக்குவோம். கட்டிடம் கட்டுறது அவருக்கு ரொம்ப மகிழ்ச்சியைத்தருகிற வேலை.  ஆனா செங்கல்லை தூக்குறது அவர் வேலை கிடையாது. வேற வழியில்லாம அவர் செங்கல் தூக்கவேண்டிய கட்டாயத்துல ஆளாகி செங்கல்ல தூக்கினார்னா எவ்வளவு எரிச்சலடைவாரோ அந்த அளவுக்கு எரிச்சலான வேலையை இந்த யோசனை தவிர்க்கக் கூடியது. இப்போ உங்களுக்குப் புரியும்னு நினைக்கிறேன்.

சரி, இப்போ தருமிக்கும் இந்த யோசனைக்கும் என்ன சம்பந்தம்னு கேக்கவரீங்க, அதானே? சொல்றேன், சொல்றேன். அதுக்கு முன்னாடி இந்த கேள்விக்கு நான் என்ன பதில் சொன்னேன்னா,

“ஒரு விடைத்தாளை திருத்துறது சுலபம். ஆனா அந்த மாணவனுக்கு நீ எங்க சரியாப் பண்ணுற எங்க சரியப் பண்ணலன்னு அவனோட தவறுகளப் பட்டியலிட்டு அதுக்கான வழிமுறைய சொல்றது கஷ்டம். இதுல ரொம்ப கஷ்டமான பகுதி எதுன்னா தவறுகளைப் பட்டியலிடறது தான். எனக்கு அந்த பட்டியலிடுற வேலை பிடிக்காது. எப்படின்னு அத தவிர்க்கிறதுன்னு யோசிச்சேன். இந்த யோசனை வந்தது, அவ்வளவு தான்.” ‘ அட, நம்மளால இவ்வளவு தன்னடக்கமாகூட பேச முடியுமா?’

இவ்வளவு நல்ல யோசனை எப்போ வெளிச்சத்துக்கு வந்துருக்கணும்? தோனினவுடனே, இல்லையா? அதான் இல்லை. இங்கதான் நம்ம தருமி நிக்கிறாரு.

தருமி தலைவனுக்கும் இடையிலுள்ள மெல்லிசான கோடு

தருமிக்கும் தலைவனுக்கும் இடையிலுள்ள மெல்லிசான கோடு

தருமின்னவுடனே திருவிளையாடல் நாகேஷ்தான் நமக்கு நினைவுக்கு வருவாரு. அந்த உருவம், நடை, உடை, பாவனை, அவர் கேள்வி கேட்ககேட்க  சிவன் பதில் சொல்லசொல்ல, நாகேஷோட உடம்பு பின்னாடி வளைஞசுகிட்டே  போகும்பாருங்க. வேற யாராலும் இப்படி வெளுத்து வாங்கியிருக்கமுடியுமான்னு யோசிக்ககூட முடியல. அவரோட மனசு. “ஆயிரம் பொன்னாச்சே.சொக்கா”ன்னு தவிப்பாரு. அத்தனையும் எனக்கே எனக்கான்னு ஒரு சந்தேகம் வேற.

நிறையபேரோட மனசு தருமி மாதிரிதான். எல்லாம் எனக்கே. ஆனா எல்லாத்தையும் நம்மளால பண்ண முடியாது. இந்த யோசனையும் அப்படித்தான். தோணி ஒருமாசமாச்சு. யோசனை நம்மளோடது; ஆனா, இந்த யோசனையையும் நம்மளே செயல்படுத்தனும்னு நெனைக்கிறப்போ தான் பிரச்சினை. வேற யாரும் அந்த புகழ்ல பங்குவாங்கிடக்கூடாது. எல்லாம் எனக்கே. ஒருமாசம் கழிச்சு மனசாட்சி சொல்லுது, “தம்பி, உன்னால இதப் பண்ணமுடியாது. இத யாரால செய்யமுடியுமோ அவன கூடசேர்த்துக்கோ.”

அப்புறம் தான் நமக்கு எப்பவோ படிச்ச திருக்குறள்லாம் நினைவுக்கு வருது.

இதனை இதனால் இவன்முடிக்கு மென்றாய்ந்து // அதனை அவன்கண் விடல்

இததான் “delegation”-னு சொல்லுவாங்க.

எப்போ எல்லாம் நான்தான், எல்லாம் எனக்குத்தான்னு நினைக்குறோமோ அப்ப தருமியா இருக்கோம். எப்போ இத நம்மளைவிட ஒருத்தன் நல்லா பண்ணுவான், அவன்கிட்ட அதவிட்டுட்டோம்னா நல்லதுன்னு புரிஞ்சுக்கிறோமோ அப்போ தலைவனாய்டுறோம். “அய்யய்யோ, என்னால முடியாதுன்னு எப்படி சொல்றது?” முடியும், எல்லாத்தையும் நம்மளால செய்யமுடியும். ஆனா ஒருசில விஷயத்ததான் நம்மளால நல்லா செய்யமுடியும். நம்ம நல்லா செய்றதுல கவனத்த செலுத்தி, மத்தத வேற யார் நல்லா செய்வாங்களோ அத அவங்ககிட்ட விட்டுடனும். அதுதான் தருமிலேர்ந்து தலைவனாகுற ‘மொமென்ட்’.

நல்லா கேட்டுக்கோங்க. ஒரு மெல்லிசான கோடு. கோட்டுக்கு அந்தபக்கம் தருமி, கோட்டுக்கு இந்தபக்கம் தலைவன். ஒரு சிச்சுவேஷன் வரும்போது யோசிச்சு முடிவேடுத்தீங்கன்னா நீங்க தலைவன். யோசிக்காம அடம்புடிச்சிங்கன்னா நீங்க தருமி.

நீங்க தருமியா? தலைவனா?

என்னதான் நாம T20-ல வல்லரசா இருந்தாலும், நம்ம மக்கள் இன்னும் கட்டுப்பெட்டி கர்நாடகமாவே இருக்காங்க. என்னது, T20-ல நம்ம இல்லையா? தென் ஆப்ரிக்கா தான் சேம்பியனா? அட நான் கிரிக்கெட்ட சொல்லலைங்க. 2020-ல இந்தியா வல்லரசாகுறது பத்தி சொல்றேன். அப்துல் கலாம் சொன்னாரே அது. இந்தியா வல்லரசாகுறது என்னவோ பெண்கள் கையில தான் இருக்குன்றது என்னோட நம்பிக்கை. ஆனா பெண்கள் இன்னும் 50 வருஷம் பின்னாடி தான் இருக்காங்கன்றது என்னோட அனுபவம். நான் சொல்றத நம்பலைன்னா மருந்துக்கடை பக்கமா போய் நின்னு பாருங்க. தலைவலி மாத்திரை, சளிக்கு ‘சிரப்’னு வாங்குறவங்க நேரா போய் வேணுங்கிறத கேட்டு வாங்கிடுவாங்க. ஆனா சில பேரு கடைக்காரப் பையன் இல்லன்னாலும் ஓரமா போய் நிப்பாங்க. அப்படி நின்ன உடனே கடைக்காரப்பையன் ஒருத்தர் வந்து நிப்பாரு. இவங்க அவர்க்கு மட்டும் கேக்குற மாதிரி எதோ விஸ்பர் பண்ணுவாங்க. அவரும் ஓரமா போய் எதையோ எடுத்து ஒரு பைக்குள்ள வச்சி அப்புறமா தான் கண்ணாடிப் பெட்டிக்கு வெளியே எடுத்து ரகசியமா குடுப்பாரு. என்னமோ தெரியல இதுக்காகவே வாங்கிருப்பாங்க போல, கருப்பு பாலிதீன் பை.

அன்னைக்கு அப்படித்தான் நான் மருந்துக்கடைக்கு போய் வண்டிய நிறுத்துறேன், என்கூட கல்லூரில படிச்ச பொண்ணு அவ கணவரோட கருப்பு பை வாங்கிட்டு வெளியே வருது. அதாவது கருப்பு பையில் எதோ வாங்கிட்டு வருது. நான் அந்த பொண்ணப் பாத்து சிரிச்சுட்டு எப்படிருக்கன்னு கேட்டுட்டு, வழக்கமா கேக்குற நம்ம தேசிய கேள்வியக் கேட்டேன்: “எங்க இந்த பக்கம்? மருந்து வாங்கவா”? ஒரு நிமிஷம் அவ முகம் மாறிடுச்சு; ஆனா சமாளிச்சுட்டு சிரிச்சுகிட்டே “அது சரி நீ எங்க இந்த பக்கம்?” னு பதில் கேள்வி கேட்டா. நான் வாய தொறக்குறேன், தொண்டை வறண்டு போய் காத்து தான் வருது. இருந்தாலும் சமாளிச்சுக்கிட்டு நான் சொன்னேன்: “கா…காண்… காண்… காம்ப்ளான் வாங்க வந்தேன், என் பையனுக்கு. அவனுக்கு ஹார்லிக்ஸ் ரொம்ப பிடிக்கும்.”  உளறிட்டனோ? நெத்தில ரெண்டு முத்து வியர்வை வேற. அவளும் நக்கலா சிரிச்சுகிட்டே அவ கணவன்கிட்ட சொன்னா “போலாம்.” அவங்க வண்டி நகருது; அவ சொல்றா “இவன்லாம் இருக்குறப்ப இந்தியா எங்க வல்லரசாகுறதுன்னு?”

ஆமா, எல்லார் கவலையுமே இந்தியா வல்லரசாகுறது தானா?