மழைக்கால மனசு

 

tanja-heffner-263410
Photo by Tanja Heffner on Unsplash

கிட்டத்தட்ட ஒரு மணிநேரமாக பெய்துகொண்டிருந்த மழையை அலுவலக வாசலிலிருந்து பார்த்துக்கொண்டே இருந்தேன். இன்று காரில் வரவில்லை; இருசக்கர வாகனத்தில் வீடுதிரும்ப வாய்ப்பே இல்லை. ஓலாவோ ஊபெரோதான் இன்றைக்கு வழி.

 

சும்மாவே இந்தநேரத்துக்கு பீக் சார்ஜிங் எகிரும். இந்தமழைக்கும் நேரத்துக்கும் எப்படியும் ஒரு 800 ரூபாயாவது தீட்டிவிடுவான். 800 ரூபாயில் கிட்டத்தட்ட ஒரு மாத பெட்ரோல் வண்டிக்கு.

பார்த்தேன். 450 ரூபாய். பரவாயில்லையே. இந்த மழைக்கு இந்த “எஸ்டிமேட்” குறைவு தான்.

வெளியில் பார்த்தேன். மழை குறைந்திருந்தது. இன்னும் கொஞ்ச நேரம் பார்க்கலாமா? 450 ரூபாயை ஏன் வீணா ஊபர்காரனுக்கு கொடுக்க வேண்டும்.

மழை தூரலாகி  மீண்டும் வலுத்தது. நின்று பெய்யும் மழை போலும்.

ஊபர் மறுபடியும் பார்த்தேன். 425 ரூபாய். கொஞ்சம் குறைந்திருந்தது. இன்னும் கொஞ்ச நேரம் காத்திருந்து பார்க்கலாமா? பார்த்தேன்.

மழை விடுவதாக இல்லை. ஊபர் 600 ரூபாய் காண்பித்தது. ச்சே, முன்னாடியே புக் பண்ணியிருக்க வேண்டும். இப்போதாவது உடனே புக் பண்ணவேண்டும்; ஒருவேளை 800 ஆகிவிடப்போகிறது.

புக்கிங் செய்து, முந்தைய சவாரிக்கு கார்ட் மூலம் பணம் செலுத்தி முடித்தபோது 900-க்கு வந்திருந்தது. மழையில் நனைந்து வீடு போனாலும் சரி, இன்றைக்கு இரவு அலுவலகத்திலேயே இருந்தாலும் சரி, இவன்கிட்ட மட்டும் காச கொடுக்க கூடாது.

சற்று நேரம் மழையையே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.

விரல்கள் அனிச்சையாக ஊபெரை சோதித்து பார்த்தது. 400 ரூபாய். அடடா, விட்டுவிடக்கூடாது.

ஒருவழியாக சவாரி உறுதியாகி இன்னும் சற்று நிமிடத்தில் கார் வரும்வேளையில் மழை சட்டென்று நின்றது. கேன்சல் செய்யலாமா? அதற்குவேறு நூறு ரூபாய் தண்டம் அழவேண்டும். போகாத ரைடுக்கு காசா? யோசித்து முடிப்பதற்கும், கார் வருவதற்கும், மறுபடியும் மழைபெய்யவும் சரியாக இருந்தது. மீண்டும் யோசிக்காமல் காரில் ஏறினேன்.

ஒரு நூறடி போயிருப்பேன், மழை வேகம் குறைந்து சற்று நேரத்தில் நின்று போனது. 400 ரூபாய் வீணோ? ச்சே ச்சே, இந்த வானமாவது வெக்காளிப்பதாவது. இன்னும் கொஞ்ச நேரத்தில் மறுபடியும் பெய்யத்தான் போகிறது.

ம்ஹூம். தூரலுக்கான அறிகுறிகூட இல்லை.

கொஞ்சமாவது பெய்தால் தேவலை. மனசு ஏங்கியது.

ஒருமணி நேரமும் ஒருதுளி மழை இல்லை. இறங்கி, பில் வந்தபோது 500 ரூபாய்.

சுத்த வேஸ்ட். பாதிமாத பெட்ரோல் செலவு.

இலேசான தூறல் மீண்டும் தொடங்கியது.

 

Advertisements

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

Up ↑