ஒக்ரோபர், 2016 க்கான தொகுப்பு

படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டிருந்தோம்.

“அப்பா, இப்போ எதுக்கு நாம இன்னொரு வீடு பார்த்தோம்? Cherry Pick வீட்ட நாம வாங்கலையா?”

“ஆமா, தம்பி.” என் 8 வயது பையனை தம்பி என்று கூப்பிடுவதுதான் வழக்கம்.

“ஏன் பா?

“அது கொஞ்சம் பெரிய ஸைஸ், தம்பி. நம்ம பட்ஜெட்டுக்குள்ள வரல.”

“அப்போ நம்ம சின்ன வீடாத்தான் வாங்க போறோமா?”

“சின்ன வீடுன்னு சொல்ல முடியாது, தம்பி. ஆனா, Cherry Pick வீட்ட விட கொஞ்சம் சின்னதா இருக்கும், அவ்வளவு தான்.”

“Cherry Pick வீடு எவ்வளவு பா?”

சொன்னேன்.

“இப்போ பார்த்த வீடு?”

சொன்னேன்.

“எவ்வளவு குறையுது?”

கிட்டத்தட்ட பத்து இலட்சம்.

“அப்பாடி!” கண்களை விரித்து, தருமி நாகேஷ் போல முதுகை வளைத்து  சிரித்தான்.

நானும் சிரிக்க, வீட்டை அடைந்தோம்.

***

“அப்பா, அப்பா, Kreative Stars னு drawing competition சொல்லிருக்காங்க பா எங்க மிஸ்.”

“ஓ, எப்போ?”

“நெக்ஸ்ட் வீக் பா. ப்ரைஸ் எவ்ளோ தெரியுமா, 5௦௦௦ பா.”

“வாவ், செம தம்பி. நீ என்ன வரைய போற?”

“அது சொல்ல மாட்டாங்க பா. காம்படிஷன் அன்னைக்கு தான் சொல்லுவாங்க.”

“சூப்பர் தம்பி. நல்ல வரைஞ்சு விண் பண்ணு என்ன?

“சரிப்பா.

சற்று நேரம் கழித்து…

“அப்பா, நான் விண் பண்ணவுடனே, அந்த ப்ரைஸ எப்படிப்பா கொடுப்பாங்க? கைலயேவா இல்ல குரியர்லையா?”

சிரித்துக்கொண்டே சொன்னேன், “கைலதாம்பா,  குரியர்ல எல்லாம் அனுப்ப மாட்டாங்க”

“ஓஹோ”

“சரி, நீ அந்த பணத்த என்ன பண்ண போற?

“அப்பா, நீ வீடு வாங்க பணம் பத்தலைன்னு சொன்னில்லப்பா. உன்கிட்ட கொடுத்துடறேன், நீ பெரிய வீடா வாங்கு”

சிரித்து கண்ணீர் வந்தது. கண்ணீர் சிரிப்பினாலா என்று தெரியவில்லை…

 

 

Advertisements