ஜனவரி, 2016 க்கான தொகுப்பு

OneWay

எதிர்வழிப்பாதை!

மாமா வீட்டில் மகனை விட்டு
அலுவல் திரும்பும் அவசரத்தில்
புதிதாய்ச் செல்லும் வழியதனால்
ஆட்டோக்காரரிடம் வழிகேட்க
“இப்படியே சர்விஸ் ரோட்ல போய்
லெப்ட்ல மெயின்ரோடு எடுத்து
ரைட்லயே அணைச்சாப்ல போயி
சிக்னல்ல ரைட் எடு சார்.”

ஆட்டோக்காரர் வார்த்தை
ஆண்டவன் வார்த்தையென
எதையும் யோசிக்காமல்
‘சர்விஸ் ரோட்ல லெப்ட்’ எடுத்த போது தான் புரிந்தது
வந்திருப்பது எதிர்வழிப்பாதை

காலை மணி ஏழரைக்கு
வேலை என்ன காவலருக்கு என்றெண்ணி
அறிவைப்புறந்தள்ளி அலட்சியமாய்
‘ரைட்லயே அணைச்சாப்ல’ போன பின்புதான் புரிந்தது

ஏழரை மணியல்ல
எனைப்பிடித்த சனி.

‘வா மாப்ள வா’ என்று சொல்லாமல் சொல்லி
ஏற்கனவே ‘ரைட்ல அணைச்ச’ என்னை
இன்னும் ‘ரைட்ல அணைச்சு’
நிற்கப் பணித்தார் காவலர்

“என்ன, ராங் சைட்ல வரீங்க?”

“சாரி சார், ஊருக்கு புதுசு ஆட்டோகாரர் வழிசொன்னார்”

“வண்டி யாருது?”

“ஏன் சார், என்னுது தான்.”

“அப்புறம் ஏன் பொய் சொல்றிங்க?

அடுத்தநொடி தான் சுள்ளென்று உரைத்தது – வாகன எண் TN ௨௨

“சென்னை வண்டி வச்சுகிட்டு ஊருக்கு புதுசுன்றிங்க?”

அபாரம்!
ஏழு வருடத்துக்குமுன் சென்னையில் வண்டிவாங்கி
ஆறேமாதத்தில் திருச்சி சென்று
ஐந்தரை வருடங்கழித்து சென்னை மீண்டதை
களைக்காமல் சொன்னதை சளைக்காமல் புறந்தள்ளி
இமைக்காமல் பார்த்தார்.

சரி, அடுத்து என்ன? அவரிடமே கேட்டேன்.

“ஆயிரம் ரூபா பைன் கட்டுங்க.”

‘காலை, மதியம், மாலை; தினமும் மூன்று வேலை’
மறக்காமல் சொல்லும் மருத்துவர் போல
காவலர் கண்களில்
அனைத்து குற்றங்களுக்கும் ஆயிரம் ரூபாய் தான் போல.

சற்றுநேர ‘பேச்சுவார்த்தை’க்குப்பின்
எதிர்ப்பக்கம் செல்ல உதவி செய்து
கனிவாகச் சொன்னார்:

“பாத்து போங்க சார், குழந்தைய வேற வெச்சிருக்கிங்க!”

‘குழந்தை’க்கு வயது எட்டு.

காந்தி மீதான எனது அபிப்பிராயம் அடியோடு மாறியது.
கடுஞ்சொல்லரையும்  கனிவாக மாற்றும் சக்தி
கண்டிப்பாக இருக்கிறது காந்திக்கு.

Advertisements