01. ஈர்த்து என்னை ஆட்கொண்ட…

கண்விழித்தும் படுக்கையில் கிடக்கும் சுகத்தில் மனம் லயித்திருந்தது. “என்னப்பா, இன்னைக்கும் இப்படி படுத்திருக்க?” என்ற மனைவியின் குரல் பளிச்சென எழுந்து உட்கார வைத்தது. பலகணிக்கு வெளியே பொழுது புலரத்தொடங்கியிருந்தது. சில்லென்ற காற்றுடன் வானம் பூவாய்த் தூறிக்கொண்டிருந்தது.  படபடவென்று காலைவேலைகளை முடித்து ஆதித்யனை எழுப்பி, பல்துலக்கி குளிக்கவைத்து, உடைஎடுத்து கொடுத்து, உணவூட்டி, பள்ளியில் விடத் தயாராகும்போதும் பூத்தூறல் தொடர்ந்து கொண்டிருந்தது. பூத்தூறல் என்றுமே ஆனந்தம். “வா”வென்று உள்ளிழுத்து நனையவிட்டு புத்துணர்வூட்டும் ஆளுமை. “புறந்தூய்மை நீரானமையும்” என்ற வள்ளுவன் வாக்கிற்கு சவால்; அகத்தையும் கழுவி மனதைத் தூய்மையாக்கும் அதிசயம். ஆனால் இந்த அனுபவம், ஆனந்தம் எதையும் தராமல் குறுக்கே வந்தது பள்ளி செல்ல வேண்டிய கட்டாயம். சற்றே தயங்கிய கால்களை முன்தள்ளியது ஆதித்யனின் குரல்:

“வாப்பா போலாம்.”

“தம்பி, மழைல நனைஞ்சுட்டா?”

“வீட்டுக்கு திரும்பிடலாம்.”

விடையை விட எதிர்பார்ப்பு மேலோங்கிஇருந்ததாகவே தோன்றியது. குழந்தைபருவ முடிவுகள் எளிதானவை. ஏகப்பட்ட  குறுக்கீடுகளை முன்னிறுத்தி குழம்பி இயலாமையை நோக்கி நகர்வன அல்ல. வழக்கம் போல, வழிநெடுகிலும் பேசிக்கொண்டே பள்ளியை அடைந்தபோது சற்றே நனைந்திருந்தோம். ஆனால் ஆதித்யன் வீடு திரும்புமளவுக்கு இல்லை.

மனைவி தயார். அடுத்து மருந்தீஸ்வரர் ஆலயம். மாலை வேலைகளிலும், ஞாயிறு முன்காலையிலும் மட்டுமே இதுவரை சென்றிருந்தோம். ஒரு புதன்கிழமையில், சுமார் பத்து மணிக்கு ஆலயம் அரவமற்றிருக்கும் என்றெண்ணியிருந்த எங்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. ஆலயம் சிவனடியார்களால் நிறைந்திருந்தது. மருந்தீஸ்வரர் ஆலயத்தின் சிறப்பம்சம் எந்நேரமும் ஓர் அடியவர் சிவன் குறித்தோ திரிபுரசுந்தரி அம்மன் குறித்தோ பாடல் பாடிக்கொண்டிருப்பார். தானியங்களைக் கொத்தித் தின்னும் புறாக்கள் ஒருபுறம்; பேரணியாக தரையில் அமர்ந்து, உண்டு, அரவம் கேட்டால் சடசடவென இறக்கைகளை அடித்துக்கொண்டு மதிற்சுவர் மீதோ, கோபுரம் மீதோ சென்றமரும். அருகே கோசாலையிலிருந்து கொணரப்பட்ட பசுக்களும் கன்றுகளும், தொழுவத்திற்கே உரிய மணத்தோடு. மறுபக்கத்தில் கோசாலையில் இருக்கும் பசுக்களுக்கும், கன்றுகளுக்கும் அகத்திகீரையோ புற்கட்டோ கொடுக்கலாம். கம்பிகளுக்கு அப்பால் இருக்கும் பசுக்கள் நாக்கை நீட்டி, கொடுத்ததைக் கவ்வி உள்ளிழுத்து உண்ணும் போது ‘எங்கே நம் கையையும் சேர்த்து இழுத்து விடுமோ’ என்ற எண்ணம் தோன்றாமலிருக்காது. ஆதித்யனுக்கு பயம் கலந்த மகிழ்வான அனுபவம் அது. நாங்கள் அன்று புல்கட்டோ அகத்திக்கீரையோ வாங்கியிருக்கவில்லை. சிந்தியிருந்த வைக்கோலை அள்ளிக்கொடுத்துவிட்டு நகர்ந்தோம்.

விநாயகரையும் முருகனையும் நலம்விசாரித்து அம்மன் சந்நிதிக்கு வந்த பொழுது, தீபம் காட்டி முடித்திருந்தார் அர்ச்சகர். தீபத்தை கண்களில் ஒற்றிக்கொண்டு குங்குமப்பிரசாதம் பெற்று நகரமுற்பட்டபொழுது எங்களை கவனித்த அர்ச்சகர் இருக்கச் சொல்லி அம்மனுக்கு தீபம் காட்டி அம்மன் சூடிய மலர்களைக் கொடுத்து அனுப்பிவைத்தார்.

மருந்தீஸ்வரர் சந்நிதிக்கு நுழையும்முன் பழுத்த அடியார் ஒருவருக்கு ஆடைதானம் செய்து ஆசிபெற்றுக் கொண்டிருந்தனர். மண்டபத்தில் பெண்மணிகள் பூத்தொடுத்துக் கொண்டிருந்தனர். இதுவும் தினசரி செயலாக இருக்கிறது. இவர்களைப்பார்க்கும்போழுதெல்லாம் ‘பார்த்திபன் கனவு’ சுந்தரசோழன் நித்தியகட்டளை காட்சிகள் நிழலாடும். சென்னையின் கிழக்கு கடற்கரை சாலை தொடங்கும் திருவான்மியூர் சாலைக்கு சிலநூறு அடிகளுக்குள்ளாகவே  காணப்படும் நிதானம் இக்கால ஆச்சரியம். உள்ளே ஒரு தம்பதி பாடிக்கொண்டிருந்தனர். கணவர் மேனிமுழுதும் திருநீரும், இருவர் கழுத்திலும் எலுமிச்சையளவு ருத்ராக்ஷங்களால் ஆன மாலையும் அணிந்திருந்தனர்.

சிவன் லிங்கவடிவில் அருள்பாளித்துக்கொண்டிருந்தார். சிவன் ஒரு சிலிர்ப்பான அனுபவம். திருச்சி தாயுமானவர், ஈஷாவின் தியானலிங்கம் இரண்டுக்கும் அடுத்து பார்க்கும்பொழுதே பரவசத்தையும் சிலிர்ப்பையும் வழங்கும் லிங்கவடிவில் பிறவி மருந்தீஸ்வரர். மூன்று ஆலயங்களுமே ‘ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே’ எனும் திருவாசக வரிகள் உயிர்பெற்ற கணங்கள். சிவனுக்கு அருகே சென்று ஈர்க்கப்படாமல் திரும்பிய தருணங்கள் பலஉண்டு. சற்றேறக்குறைய மூன்று வருடங்களுக்கு முன் தியானலிங்கத்தின் வாயிலாக ஈர்த்தவரை நினைக்கும்பொழுதெல்லாம் கண்கள் நீர் சொரியும். இன்றும் சிலிர்க்க வைத்து, நல்லதே நடக்குமென ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார்.

அடுத்து: 02. நல்ல நாள்

1 thoughts on “01. ஈர்த்து என்னை ஆட்கொண்ட…

Add yours

பின்னூட்டமொன்றை இடுக

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

Up ↑